தமிழீழத் தேசியக் கொடி பயன்பாட்டுக் கோவை

 01. முன்னுரை

உலகிலுள்ள எல்லா நாடுகளும் தத்தமக்கெனத் தேசியக் கொடிகளை உருவாக்கியுள்ளன. ஒரு நாட்டின் மீது அந்நாட்டின் குடிமக்கள் கொண்டிருக்கும் மதிப்பின், பற்றின் வெளிப்பாடே தேசியக்கொடி வணக்கமாகும். தேசியக்கொடியை ஏற்றிப் போற்றியபின்பே முதன்மையான விழாக்கள், நிகழ்ச்சிகள் என்பன ஒவ்வொரு நாட்டிலும் தொடக்கப்படுகின்றன.

மாற்றாரின் பிடியிலிருந்து தமிழீழ மண்ணை முற்றாக விடுவிப்பதற்கான போராட்டம் வீறுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஆயிரக்கணக்கான மாவீரரின் உயிர்களை விலை கொடுத்து மாற்றாரிடமிருந்து மீட்டெடுத்த எமது பாரம் பரியத் தமிழீழ மண்ணில் தமிழீழ நாட்டுக்கான தேசியக்கொடியை எமது தேசியத்தலைவர் ஏற்றிப்பறக்கவிட்டுள்ளார்.

நாடு உருவாகுதற்கு முன்பே நாட்டுமக்களால் முறைப்படி கொடிவணக்கம் செலுத்தி, கொடிவணக்கப்பாடலை இசைத்து முதன்மை விழாக்களை, நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் தமிழீழமண் தேசியக்கொடி வரலாற்றில் ஒரு புதுமை சேர்த்திருக்கிறது.

உலகம் வியக்கக்கூடிய புதுமையான வரலாற்றைப் பெற்ற எமது தேசியக்கொடியை ஏற்றிப்போற்றும் முறையைத் தமிழீழ மக்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகத் தேசியக்கொடிப் பயன்பாட்டு விதிக்கோவை என்ற இக்கைந்நூலைப் பெருமகிழ்ச்சியுடன் வெளியிடுகிறோம்.

02. தேசியக்கொடியின் தன்மை

ஒரு நாட்டின் தேசிய இனங்கள், நாட்டு மக்களின் பண்புகள், ஆட்சி, இறைமை என்பவை உட்பட அந்த நாட்டைக் குறிக்கின்ற ஒட்டுமொத்தமான பொதுச் சின்னமாகத் தேசியக்கொடி விளங்குகின்றது.

03. தேசியக்கொடியின் அமைப்பும் அளவும்

ஒவ்வொரு நாட்டினதும் இயல்புகள், நிலைமைகள், எண்ணங்கள் ஆகியவற்றின் வெளிப்பாடாக அந்தந்த நாடுகளின் தேசியக்கொடிகளின் சின்னம், நிறம், அளவு, அமைப்பு என்பன வேறுபட்டிருக்கும். தேசியக்கொடிகளின் நீள, அகலங்கள் பெரும்பாலும் 3:2 என்ற கூறுபாடு (விகிதம்) கொண்டனவாக அமைகின்றன. சில நாடுகளின் தேசியக்கொடிகளின் நீள, அகலங்கள் 2:1 என்ற அளவினவாகவும் இன்னும் சில நாடுகளில் 1:1 என்ற அளவைக் கொண்டனவாகவும் (சதுரமாகவும்) அமைகின்றன.

04. தேசியக்கொடியின் பெருமையும் கொடி வணக்கமும்

நாட்டைப்போற்றி வணங்குதற்கீடாகத் தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தப்படுகின்றது. தேசியக்கொடியை வணங்குவது, நாட்டை வணங்குவது போலாகும். நாட்டின் தலைவர், படை, ஆட்சி என்பவற்றைவிடவும் உயர்ந்ததாகத் தேசியக்கொடி மதிக்கப்படுகின்றது. எனவேதான் எந்தவொரு நாட்டிலும் எந்தச் சிறப்பு நிகழ்வுகளின்போதும் நாட்டின் தலைவர், படை வீரர், அரசுப் பணியாளர், குடிமக்கள் அனைவரும் கொடிவணக்கம் செய்கின்றனர்.

நாட்டின் எல்லைப்புறப் பகுதிகளிலும் குறிப்பிட்ட சில பொது இடங்களிலும் தேசியக்கொடியை நாள்தோறும் பறக்கவிடலாம்.

வெளிநாடுகளிலுள்ள எமது பணியகங்களிலும் தூதரகங்களிலும் பகலில் எந்நாளும் எமது தேசியக்கொடியைப் பறக்கவிடலாம்.

தேசியக்கொடி ஏற்றப்படும்போது அனைவரும் எழுந்துநின்று வணக்கம் செலுத்துதல் வேண்டும்.

கொடிவணக்கத்தின்போது சீருடையில் இருக்கும் பணி ஆளணியினர் (படையணிகள், சாரண இயக்கத்தவர், முதலுதவிப்படை முதலியன) தத்தமது பணிகளுக்குரிய கட்டளைகளில் விதித்துரைக்கப்பட்டவாறு முறைப்படி கொடிவணக்கம் செலுத்துவர்.

சீருடை அணிந்தவர்கள் தவிர ஏனையோர் தலையணி (தொப்பி) அணிந்திருப்பின் தேசியக்கொடி ஏற்றப்படும் வேளையில் அவற்றை வலது கையாற் களைதல்வேண்டும். தலையணியைக் களைந்தபின்பு வலது கையை இடப்பக்க நெஞ்சின் மீது வைத்துக் கொடி வணக்கம் செலுத்தவேண்டும். தமிழீழக் குடியுரிமையாளரல்லாதாரும் வலது கையை இடப்பக்க நெஞ்சின் மீது வைத்து வணக்கம் செலுத்தலாம். அல்லது கவன நிலையில் (Attention) நிற்கவேண்டும்.

வணக்கத்துக்குரிய தேசியக்கொடியை உடையாக அணியவோ உடையின் பகுதியாகப் பொருத்தவோ கூடாது.

தேசியக்கொடியிற் பொறிக்கப்பட்டுள்ள இலச்சினையைப் பெறுமதியான பொருட்களிலோ உடைகளிலோ பொறிக்கலாம்.

தேசியக்கொடியில் எவ்வகையான அடையாளங்களையோ எழுத்துக்களையோ சொற்களையோ எண்களையோ வடிவங்களையோ படங்களையோ எழுதவோ வரையவோ கூடாது.

தற்காலிகமாகப் பயன்படுத்திவிட்டு வீசப்படும் எப்பொருளிலும் தேசியக்கொடியைப் பதிக்கக்கூடாது.

தேசியக்கொடி நிலத்தில் வீழ்வதை எப்பாடுபட்டேனும் தவிர்க்கவேண்டும். ஒருவேளை நிலத்தில் வீழ்ந்துவிட்டால் உடனடியாக நிலைமையைச் சீராக்கிவிடவேண்டும். கொடியில் அழுக்குப்படிந்துவிட்டால் உடனடியாகக் கழுவிக் காய விட்டபின்பே பயன்படுத்தவேண்டும்.

தேசியத்துயர நிகழ்வின்போது தேசியக்கொடியை அரைக்கம்பத்திற் பறக்கவிடப்படுவதன்மூலம் நாட்டின் துயரம் உணர்த்தப்படுகின்றது. கொடிக்கம்பத்தின் நுனியிலே பறக்கின்ற கொடி நடுப்பகுதிவரை இறக்கப்பட்டு அரைக்கம்பத்திற் பறப்பதே நாட்டின் மிகுதுயரை உணர்த்துவதாயின் தேசியக்கொடி சிதைவுறுவதோ கீழே வீழ்த்தப்படுவதோ வீசப்படுவதோ கால்களில் மிதிக்கப்படுவதோ எண்ணிக்கூடப் பார்க்கமுடியாத இழி நிலையாகும்.

தேசியக்கொடியின் நிறம் மங்கிப்போனாலோ வேறு ஏதாவது வகையிற் பழுதடைந்து பறக்கவிடுவதற்குரிய நிலையை இழந்துவிட்டாலோ அதனை உரியமுறையில் எரித்து அழித்துவிடவேண்டும். பழந்துணியாகப் பயன்படுத்துவதோ குப்பைத்தொட்டியிற் போடுவதோ தேசத்திற்குச் செய்யப்படும் அவமானமாகும். எனவே அவ்வாறு செய்யக்கூடாது.

05. கொடியையேற்றும்போதும் கொடிவணக்கத்தின்போதும் செய்யப்படக்கூடாதவை

தேசியக்கொடிக்கு வழங்கப்படுகின்ற மதிப்பு, சிறப்பு என்பன அந்த நாட்டைச் சென்றடைவது போன்று, தேசியக்கொடிக்கு ஏற்படுத்தப்படும் இழிவு, புறக்கணிப்பு என்பனவும் அதன் நாட்டையே சென்றடையும். எனவேதான் தேசியக்கொடிக்கு ஏற்படுத்தப்படும் இழிவு பெருங்குற்றமாகக் கருதப்பட்டு அக்குற்றத்துக்கு மிகுதியான ஒறுப்பு (தண்டனை) வழங்கப்படுகின்றது.

தேசியக்கொடிக்கு மதிப்புச் செலுத்துகின்ற கொடிவணக்க நிகழ்வுக்கு நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட சீரான ஒழுங்குமுறை வரையறுக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுகின்றது. கொடியேற்றம், கொடிவணக்கம் என்பனவற்றுக்கான ஒழுங்குமுறை, நடைமுறை நாட்டுக்கு நாடு வேறுபட்ட முறையில் அமைந்திருக்கும். அந்த வரையறுக்கப்பட்ட ஒழுங்கு முறைகளை மீறுவது தேசியக்கொடிக்கு இழைக்கப்படுகின்ற இழிவாகவே கொள்ளப்படும்.

தேசியக்கொடியைத் தலைகீழாகப் பறக்கவிடக்கூடாது.

மடித்தபடி மேலே ஏற்றி அங்கிருந்து விரிந்து பறக்கும் வகையில் தேசியக்கொடியை ஏற்றுதல் கூடாது. தேசியக்கொடியைக் கீழிருந்து பறந்தபடியிருக்கும் நிலையிலேயே ஏற்றவேண்டும்.

06. கொடிமீது கொண்ட பற்று

சிறப்பு நிகழ்வுகளுக்கான ஊர்வலங்களின் போது தேசியக்கொடியை ஏந்திச்செல்வதும் ஏந்தி நிற்பதும் கூடத் தேசியக்கொடிக்குச் செலுத்துகின்ற மதிப்பு வணக்கமாகும். தேசியக்கொடி ஏந்துபவர்களும் கொடிக்கம்பத்தைக் காப்பவர்களும் தேசியக்கொடி சிதையவோ கொடிக்கம்பம் சரியவோ இடமளிக்கமாட்டார்.

தேசியக்கொடியை ஏந்துபவர் ஏந்துகின்ற கொடியைக் கடமை முடிந்ததும் உரிய இடத்தில் வைப்பர்; அல்லது தகுதியானவரிடம் கையளிப்பர்; எவ்விடர்வரினும் உயிரேபோகின்ற நிலைவரினும் கொடியைக் கைவிடாத தன்மையைக் கொண்டிருப்பர். தாம் ஏந்துகின்ற கொடி சரிந்தாலோ கீழே விழுந்தாலோ அது தமது நாட்டுக்கு இழுக்காகிவிடும்; தமது நாட்டின் ஆட்சி வீழ்ந்ததாகக் கொள்ளப்படும் என்ற உணர்வு அவர்களிடமிருக்கும். பண்டைக் காலத்திலேயே தமிழ்மக்கள் நாட்டின் கொடிமீது கொண்டிருந்த பற்றும் அதற்குக் கொடுத்த மதிப்பும் பற்றி இலக்கியங்களும் வரலாறுகளும் எடுத்தியம்புகின்றன.

07. தமிழீழத் தேசியக் கொடியின் வரலாறு

எமது தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பெற்ற புலிக்கொடி 1977 ஆம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியாக இருந்துவருகிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியிலுள்ள எழுத்துக்கள் நீக்கப்பெற்ற கொடி தமிழீழத் தேசியக் கொடியாகத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் 1990 ஆம் ஆண்டு அறிவிக்கப்பெற்றது. தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூர்ந்த இரண்டாவது மாவீரர் நாளில் அதாவது 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் நாள் முதல் தடவையாகத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் அவரது பாசறையில் ஏற்றிவைக்கப்பெற்றது.

08. நிறங்களும் குறிக்கோளும்

எமது தேசியக்கொடியை மஞ்சள், சிவப்பு, கறுப்பு, வெள்ளை ஆகிய நான்கு நிறங்கள் அழகுபடுத்துகின்றன. தனிப்பாங்கான தேசிய இனமான தமிழீழத் தேசிய இனம் தனது சொந்த மண்ணில் தன்னாட்சி அமைத்துக்கொள்ள விழைவது அதனது அடிப்படை அரசியல் உரிமையும் மனித உரிமையுமாகும். தமிழீழ மக்கள் நடத்துகின்ற தேசிய விடுதலைப் போராட்டம் அறத்தின்பாற்பட்டது, நியாயமானது என்பதையும் தமிழீழத்தேசம் எப்பொழுதும் அறத்தின் பக்கம் நிற்குமென்பதையும் மஞ்சள் நிறம் குறித்து நிற்கிறது.

தேசிய விடுதலை பெற்ற தமிழீழத் தனியரசை அமைத்துவிடுவதால் மட்டும் முழுமையான விடுதலையைப் பெற்றுவிட்டதாகக் கொள்ளமுடியாது. தமிழீழக் குமுகாயத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்படவேண்டும். சாதிய, வகுப்பு முரண்பாடுகள் அகற்றப்படவேண்டும். பெண்ணடிமைத்தனம் நீக்கப்படவேண்டும். இதற்குக் குமுகாய அமைப்பிற் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். சமன்மையும் சமதருமமும் குமுகாய நீதியும் நிலைநாட்டப்படவேண்டும். இத்தகைய புரட்சிகரமான குமுகாயமாற்றத்தை வேண்டிநிற்கும் எமது அரசியல் இலக்கைச் சிவப்பு நிறம் குறியீடு செய்கின்றது.

விடுதலைப்பாதை கரடுமுரடானது; சாவும் அழிவும் தாங்கொணாத் துன்பங்களும் நிறைந்தது. இவற்றைத் தாங்கிக் கொள்ளவும் விடுதலையடைந்தபின் ஏற்படப்போகும் நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு தேசத்தைக்கட்டியெழுப்பவும் பாதுகாக்கவும் உருக்குப் போன்ற உறுதியான உள்ளம் வேண்டும்; அசையாத நம்பிக்கை வேண்டும்; தளராத உறுதி வேண்டும். இவற்றைக் கறுப்பு நிறம் குறித்துக் காட்டுகின்றது.

விடுதலை அமைப்பும் மக்களும் தலைவர்களும் தூய்மையையும் நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டுமென்பதை வெள்ளை நிறம் குறித்து நிற்கிறது.

09. தமிழீழத் தேசியக் கொடியின் வகையும் அளவும் கொடிக்கம்பத்தின் அளவும்

பொதுக்கொடி 4 x 6
விடுதலைப்புலிகள் இயக்கப் பாசறைகள், அரசநிறுவனங்கள், பள்ளிகள், கூட்டுறவு அமைப்புக்கள், குமுதாய அமைப்புக்கள் போன்ற எல்லாப் பொது இடங்களிலும் இக்கொடி பறக்கவிடப்படும். இவ்விடங்களில் நிகழ்ச்சிகள் தொடங்குமுன்பும் இத்தேசியக்கொடி ஏற்றிவைக்கப்படும்.

உள்ளிடக்கொடி 3 x 5
அரசுத்தலைவர், அமைச்சர்கள், படைத்தலைவர்கள் போன்றோரின் பணிமனைகளிலும் மாநாட்டுக்கூடங்களிலும் நிறுத்தியிற் பொருத்தப்பட்ட தேசியக்கொடி வைக்கப்படலாம். பணிமனையின் உள்ளே நுழைவாயிலின் வலப்புறத்தில் வைக்கப்படவேண்டும்.

எழுச்சிக்கொடி 2 x 3
பொது இடங்கள் அனைத்திலும் எழுச்சியை ஏற்படுத்துவதற்காக இக்கொடி பறக்கவிடப்படும்.

வீட்டுக்கொடி 2 x 3
தாயகப்பற்றுடைய தமிழீழக் குடியுரிமையாளர் எவரும் தமது வீட்டுக்கு முன்னாலோ வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றிலோ இக்கொடியைப் பறக்கவிடலாம்.

அணிவகுப்புக்கொடி 2 x 3
அணிநடை மற்றும் ஊர்வலங்கள் போன்றவற்றில் இக்கொடி பயன்படுத்தப்படும்.

10. கொடிக்கம்பமும் கயிறும்

கொடிக்கம்பங்கள் மேற்குறிக்கப்பட்ட அளவுகளில் வெள்ளிநிறத்தில் இருத்தல் வேண்டும.; கொடிக்கம்பத்தின் நுனியில் வெள்ளி நிறமுடையதும் இங்குக் காட்டப்பட்ட வடிவிலமைந்ததுமான முடி பொருத்தப்படவேண்டும். கொடிக்கயிறு வழுக்காமலிருப்பதற்காகக் கயிற்றைக் கட்டுமிடத்தில் தடை அமைக்கப்படல் வேண்டும். இத்தடை பீடத்திலிருந்து மூன்றாவது அடியில் இருத்தல் வேண்டும். கொடிக்கயிறு வெள்ளை நிறத்தில் இருத்தல்வேண்டும். கொடிக்கம்பம் பீடத்திலிருந்து 24 அடி உயரத்தில் இருக்கவேண்டும். பீடம் இல்லாத இடங்களில் நிலமட்டத்திலிருந்து 24 அடி உயரத்தில் இருக்கவேண்டும். கொடிக்கம்பம் 2 அங்குல விட்டமுடையதாக இருக்கவேண்டும்.

11. கொடிப்பீடம்




கொடிப்பீடம் நிலமட்டத்திலிருந்து ஓர் அடி உயரங் கொண்டதாகவும் 2 அடி நீளம் 2 அடி அகலம் கொண்டதாகவும் இருக்கவேண்டும். பீடத்தின் முன்புறம் பீடத்தோடு இணைந்து 2 அடி நீண்டு நிலத்திலிருந்து அரை அடி உயரமுடையதாக இருக்கவேண்டும்.

12. கொடியேற்றும் முறை


தேசியக்கொடியை ஏற்றும்போது கொடியேற்றப்படும் வளாகத்திலோ வீட்டிலோ இருக்கும் அனைவரும் (நோயாளர் நீங்கலாக) கொடியேற்றும் நிகழ்விற் பங்கேற்கவேண்டும். கொடிக்கம்பத்திற்கு இடது பக்கத்தில் நின்று கொடியையேற்றவேண்டும். கொடியை மிடுக்கோடும் சீரான வேகத்தோடும் ஏற்றவேண்டும். கூடுதலான வேகத்துடனோ மிக மெதுவாகவோ ஏற்றக்கூடாது. கொடியையேற்றுபவர் தானே கொடியையேற்றிக் கயிற்றைக் கொடிக்கம்பத்திற் கட்டவேண்டும். தேசியக்கொடியை ஏற்றும்போது கொடியை விரிப்பதற்கும் கொடி ஒழுங்காக இருக்கிறதா என்பதை உறுதிசெய்வதற்கும் கொடி நிலத்திற்படாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கும் கொடியை ஏற்றுபவருக்கு ஒருவர் உதவவேண்டும். கொடியையேற்றுபவர் கொடியை ஏற்றியதும் ஓர் அடி பின்னகர்ந்து வணக்க நிலையில் நிற்கவேண்டும். கொடிவணக்கப் பண் முடிவடையும் வரை அனைவரும் வணக்க (Salute) நிலையில் நிற்கவேண்டும்.

13. கொடியின்பார்வை


கொடியிலுள்ள புலியின்பார்வை கொடிக் கம்பத்திற்கு எதிர்ப்புறமாக இருத்தல் வேண்டும்.

14. தேசியக் கொடியை ஏற்றும் நேரமும் ஒளிபாய்ச்சுதலும்

கொடிக்கம்பத்தில் ஏற்றப்படும் தேசியக்கொடி நாள்தோறும் கதிரவன் எழுந்ததற்குப் பின்னர் ஏற்றப்பட்டு மறைவதற்கு முன்னர் இறக்கப்படவேண்டும்.

மங்கிய ஒளியிற் கொடியை ஏற்றுதல் கூடாது. எனவே காலை 6 மணிக்கு முன்பும் மாலை 6 மணிக்குப் பின்பும் கொடியை ஏற்றவேண்டுமெனிற் கொடிப் பீடத்திலிருந்து கொடிக்கம்பத்தின் உச்சிவரை போதுமான ஒளிபாய்ச்சப்படவேண்டும். கொடியேற்ற நிகழ்வு நடைபெறும் இடத்திலும் போதுமான வெளிச்சம் இருக்கவேண்டும்.

தேசியக்கொடியை முழுமையான வெளிச்சத்தின்கீழ் இருபத்துநான்கு மணிநேரமும் பறக்கவிடலாம்.

தேசியக்கொடி பொதுவாக மாலை 6 மணிக்கு முன்னர் முறைப்படி இறக்கப்படவேண்டும். கொடியேற்றித் தொடக்கப்படும் நிகழ்ச்சிகள் மாலை 6 மணிக்குப் பின்னரும் தொடருமாயின் நிகழ்ச்சி முடிவுறும் வரை கொடிக்கு வெளிச்சம் பாய்ச்சப்படவேண்டும். இரவில் நிகழ்ச்சி முடிவுற்றதும் கொடியை அமைதியான முறையில் இறக்கலாம்.

கொடியேற்றித் தொடக்கப்படும் நிகழ்ச்சிகள் நாட்கணக்கில் தொடருமாயின் அந்த நிகழ்ச்சிகள் முடிவுறும்வரை தேசியக்கொடி இரவும் தொடர்ச்சியாகப் பறக்கவிடப்படலாம். ஆனால் கொடிபறப்பது தெளிவாகத் தெரியக்கூடியவாறு போதிய வெளிச்சம் பாய்ச்சப்படவேண்டும். நிகழ்ச்சிகள் முடிவடைந்தபின் முறைப்படி தேசியக்கொடி இறக்கப்படவேண்டும்.

15. எமது தேசியக்கொடியுடன் வேறு நாடுகளின் தேசியக்கொடிகள்


Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.